teakadai

teakadai
சூப்பர்ஸ்டார்களும் ! தலைவர்களும் உருவாகும் இடம்

Monday, February 3, 2014

பனித்துளி....







ஊட்டியின் ஆறுமணி குளிரில்
விடிந்தும் விடியாத இருளில்
நீயும் நானும் உன்னுடன் செல்ல
நானும் நீயும் என்னுடன் வர
நடந்து செல்கிறோம்!!!

நீ இயற்கையை ரசிக்க
நான் உன்னை ரசிக்கிறேன்
ஊரே நெருப்பில் குளிர் காய
நானோ உன் உள்ளங்கை பிடியில் !!!

உனக்கு குளிர்கிறது! எனக்கு வியர்க்கிறது !!
வியர்ப்பதெப்படி என வியக்கிறது !!!

உன்னுடன் இருக்கும் இப்போதெல்லாம்
வாலி காதல் பாடல் எழுதி கொண்டே
வலப்பக்கமாய் வருகிறார் !!!
இளையராஜா இசை வாசித்துகொண்டே
இடப்பக்கமாய் வருகிறார் !!!!

இவர்கள் ஏன் எல்லா படத்தின்
காதல் பாடல்களையும்
நம்மை நினைத்துகொண்டே எழுதுகிறார்கள்!!!

சரி விடு ... பிழைத்து போகட்டும் ...
நம் காதல் நம்மை மட்டுமல்லாது
எல்லோரையும் வாழ வைக்கட்டும் !!!

தூரத்தில் எங்கோ குயில் கூவுகிறது என்
காதில் மெல்ல நீயும் கூவுகிறார்..
நீ சற்று முன் பேசியதின் எதிரொலி தானது
உனக்கு எப்படி புரியவைப்பது?

மயிலை பார்த்து அதன் அருகில் ஓடுகிறாய்
உன்னை பார்த்து அது ஓடுகிறது?
இவ்வளவு அழகிய மயில் இருக்கும்போது
நம்மை யார் பார்பார்கள் என்று அது ஓடுவதை
உனக்கு எப்படி புரியவைப்பது ??




நம் விடுதிக்குள் சென்றதும்
நாம் தேநீர் அருந்தலாமா என்கிறாய்?
நீ குடித்து தந்த நீர் தேன் நீர் ஆகும்போது
பின் எதற்கு தேநீர் வேறு தனியாக?

குளியலறைக்குள் குளிக்க சென்ற நீ
ஒரு கணம் என்னை ஏனடி பார்த்தாய்?
குளிக்க நீ மட்டும் செல்வாயோ?
குளிப்பாட்ட சொல்வாயோ?
கேள்வி குளியலில் நான்...

எதுவும் சொல்லாமல்
அறைக்கதவை அறைந்தாய்..
என்னையே அறைந்தது போல இருந்தது!!

சோப்பாக நானாக
நீராக நானாக
துண்டாக நானாக
உன் கைகளாக நானாக
என்ன தவமும் செய்வேனடி !
எத்தனை காலமும் செய்வேனடி !!
குளியலறையில் நீயும்
கற்பனை அறையில் நாமும்
குளித்துகொண்டிருந்தோம் !!!




உன்னுடன் குளித்த சோப்பு
உன் வாசத்தை தன்னுடன் ஏற்றிக்கொண்டு
உன் வாசத்தை பரப்பியது..
குளித்து முடித்து நீ வர
ஊட்டி இன்னும் அழகாய் தெரிந்தது..

நீ தலை துவட்ட அதில் தெறித்த துளியொன்று
என் உதட்டில் பட்டது! பட்டதும் சுட்டது!!
உன்னை இழுத்து நான் அணைத்து நிற்க
என் தலை கோதி இதழ் பதித்தாய்!!
சாப்பிட என்ன வேணும் என்றாய்?
இரண்டாம் பந்தி சாப்பிட்டு பழக்கமில்லையே....
பச்சை நிற சேலைக்குள் நீ - உள்ளே!
பச்சை நிற போர்வைக்குள் மலை - வெளியே!!
நீ அசைவது மலை ஆடுவது போல் உள்ளது
மலை நிற்பது நீ தூங்குவது போல் உள்ளது
மயிலாய் நீ! மலையாய் நீ!!
குயிலாய் நீ!!! குளிராய் நீ !!!!
ஊட்டி அழகை காட்ட...

குடும்பத்தை அழைத்து வருகிறார்கள் - நானோ
ஊட்டிக்கு அழகை காட்ட
உன்னை அழைத்து வந்தேன்.




ரோஜா மலர் கண்காட்சி !
நீ ரோஜாமலர்களை தொட்டு தொட்டு செல்கிறாய் !!
நீ தொடாத மலர்களெல்லாம் உதிர்ந்து மடிவதை பார் !!!
நானும் அப்படியே உன்னுடன் வாழாவிடில் !!!!

உன்னுடன் வாழும் இந்த நாட்கள்
என்னுடன் நான் வாழ்ந்த நாட்கள்
நினைக்க நினைக்க கண்ணீர்...
கண்களில் கண்ணீர் நிறைய
கண்கள் திறந்து பார்க்கிறேன்..
மொட்டை வெயில் முகத்தில் அறைய
மொட்டை மாடியில் நான்..

இப்போது நிஜமாகவே அழுகிறேன்.
ஊட்டியில் உன்னுடன் .. எல்லாம் கனவா?
தனிமையில் நான்... இதுதான் நிஜமா?
தனிமை வாழ்க்கை கனவாகுமா
கண்ட கனவு நிஜமாகுமா?
நீ தொடாத ரோஜாமலராய் நானும் ஆவேனோ?







விடை தெரியா நிஜத்தில் நான்...
கனவில் உன்னை மீண்டும் பார்க்க..
கண் மூடி பார்க்கிறேன்..
தூக்கம் வர வில்லை.. கண்ணீர் வருகிறது...
கண்களை துடைக்க வில்லை நான் ..
கனவு அழிந்திடுமோ என்கிற அச்சத்தில்...


சதீஷ் சந்திரன்..